தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனை செய்யப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் 61 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இன்று 11,121 பரிசோதனை செய்யப்பட்டதில் 536 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த 536 பேரில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். எனவே பாதிப்பு எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 364 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக சீரான வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டிருக்கிறது. மே 4ம் தேதியிலிருந்து தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிறது. இடையில் மே 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறைவாக இருந்தது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கூட கிட்டத்தட்ட 500க்கு அருகில் தான் இருந்தது. நேற்று  639 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டநிலையில், இன்று 536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் இதுவரை 3 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தான் தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்பு கண்டறியப்படுகிறது. 

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்; இதுவரை 4406 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று 3 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. 7270 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர் 

தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 0.68% என்ற அளவிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமானோர் குணமடைவதும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் ஆறுதலளிக்கும் விஷயங்களாக உள்ளன.