தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த கட்டத்தை கடந்து தற்போது, நாளுக்கு நாள் குறையும் கட்டத்திற்கு வந்துவிட்டோம். தினமும் சராசரியாக 7000ஐக்கும் அதிகமான மாதிரிகள் சோதனை செய்யப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது.

இன்று 7176 பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், வெறும் 52 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1885லிருந்து 1937ஆக அதிகரித்துள்ளது. இந்த 52 பேரில் 47 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 4 பேர் மதுரை, ஒருவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். 

தமிழ்நாட்டில் தினமும் உறுதியாகும் கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையை சேர்ந்தவர்களாக இருந்துவந்த நிலையில் இன்று 5 பேரை தவிர அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள். 

தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது சம அளவிலோ உள்ளது. அந்தவகையில் இன்று 81 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதனால் 1020லிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1101ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதால், பாதிப்பு தொடர்ச்சியாக கட்டுக்குள் உள்ளது.

அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. இன்று ஒருவர் கூட இறக்கவில்லை என்பது கூடுதல் நற்செய்தி. 29797 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.