5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!
தமிழகத்தில் புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய மாவட்டங்களுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். புதியதாக உருவாகியிருக்கும் 5 மாவட்டங்களையும் சேர்த்து தற்போது தமிழகத்தில் 35 மாவட்டங்கள் இருக்கின்றன. மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருவதால், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.