தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. தினமும் புதிய உச்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்துவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. பரிசோதனை எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டுள்ள 27,256 பேரில் 18,693 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

சென்னை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதில், குறிப்பாக ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் தான் பாதிப்பு உக்கிரமாக உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் வீதம், 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது தமிழக அரசு. அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகிய 5 அமைச்சர்களும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மூன்று மண்டலங்களும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய 3 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

வளசரவாக்கம், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய 3 மண்டலங்களும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய 3 மண்டலங்களும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.