நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவித்துள்ளதால், தமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் -  மே மாதங்களில்  7 கட்டங்களாக நடைபெற உள்ளதாகவும் ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வரும் ஜூன், 3ஆம் தேதியுடன், தற்போதைய மக்களவை உறுப்பினர்களில் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 17 வது மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில், இந்திய தேர்தல் ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா சுஷில் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி ‘’ ஏப்ரல்  11 ஆம் தேதி தொடங்கி  மே மாதம் 19 ஆம் தேதிவரை தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக தேர்தல்  நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

அன்றைய தினமே காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய நாள் 17-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, அடுத்து 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல், தேர்தலுக்கு மறுநாள் 19-ஆம் தேதி புனித வெள்ளி, அடுத்து 20, 21 - சனி, ஞாயிறு என்பதால் வழக்கமான விடுமுறை தினம். ஆகவே அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.