கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்த, டெல்லியை சேர்ந்த 31 வயது இளைஞர் நிதிஷ் ஷர்மா , திடீர் என உடல் நல பிரச்சனையின் காரணமாக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலில் பரிசோதித்த மருத்துவர்களும், சுகாதார துறையினரும் நோய் தொற்று இல்லை என கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.

பின்னர் இவருடைய ரத்தமாதிரியின் ரிப்போர்ட் வந்த போது, அதில் இந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பின் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பட்ட, நிதீஷ் சர்மா கொடுத்த விலாசத்தில் அவரை தேடியபோது அவர் அங்கு இல்லை. அவர் விழுப்புரத்தை விட்டு வெளியில் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.  இதை தொடர்ந்து நிதிஷ் ஷர்மாவை பல இடங்களில் போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. 

எனவே டெல்லி இளைஞர் மூலம் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டது. இதனால் அவரை தேட மொத்தம் 7 தனி படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விழுப்புரம், காஞ்சிபுரம், போன்ற பல இடங்களில் இவரின் போஸ்டர் ஒட்டப்பட்டு இவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஓட்டம் பிடித்த இவரை, செங்கல்பட்டு அருகே கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தனி படை போலீசார் சுற்றி வளைத்து  பிடித்து கைதுசெய்துள்ளனர்.  இதை தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் கொரோனா வார்டில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் இவர் கொடுத்த விலாசத்தில் இல்லாமல் போனது, 144 நான்கு தடையை மீறி செயல் பட்டது, கொரோனா அச்சுறுத்தலை மக்களுக்கு வரவைத்தது உள்ளிட்ட 5 வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவரை ஜாமினில் போலீசார் விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.