தமிழ்நாட்டில் இன்று மேலும் 4549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 5106 பேர் ஒரே நாளில் கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 45888 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை இதுதான். இன்று தமிழ்நாட்டில் 4549 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. பரிசோதனை அதிகரிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரிக்காமல் குறைந்திருப்பது நல்ல சமிக்ஞை. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 82128ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று 5000 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த நிலையில், இன்று அதைவிட அதிகமாக இதுவரை இல்லாத அளவிற்கு, 5106 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416ஆக அதிகரித்துள்ளது. 46714 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இன்று 69 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 2236ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாதிப்பு தாறுமாறாக அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது, நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1,56,369. இதில் 1,07,416 பேர் குணமடைந்திருப்பதும் தமிழக மக்களுக்கு நம்பிக்கையளிக்கிறது.