தமிழ்நாட்டில் இன்று மேலும் 4538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகபட்சமாக 48669 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை இதுதான். இன்று தமிழ்நாட்டில் 4538 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,907ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. பரிசோதனை அதிகரிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரிக்காமல் குறைந்திருப்பது நல்ல சமிக்ஞை. சென்னையில் இன்று 1243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 83377ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று அதிகபட்சமாக 5106 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருந்த நிலையில், இன்று 3391 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,10,807ஆக அதிகரித்துள்ளது. 47782 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இன்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 79 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 2315ஆக அதிகரித்துள்ளது.