தமிழ்நாட்டில் இன்று மேலும் 4329 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 102721ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக 4343 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று தான் முதல் முறையாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இன்று மேலும் 4329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102721ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2082 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 64689ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2357 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 58478ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 64 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1385ஆக அதிகரித்துள்ளது.