தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாகவே கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் நேற்று மட்டும்தான் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்த நிலையில் இன்று மீண்டும் கட்டுக்குள் வந்திருக்கிறது. 

ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பு தினமும் தமிழ்நாட்டில் தாறுமாறாக அதிகரித்து கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 14லிருந்து இந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 

பரிசோதனையை தீவிரமாக அதிகப்படுத்திய பின்னர், பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது நல்ல விஷயம். அதனால் தான் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உறுதி செய்கிறது. கடந்த ஒருவாரமாகவே தினமும் பரிசோதனை செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது.

நேற்று 105 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 6109 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில், வெறும் 43 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று ஒரே நாளில் 46 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். எனவே தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 17ஆக உள்ளது.