தமிழ்நாட்டில் இன்று மேலும் 4244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலை, தற்போது தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 42531 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், மேலும் 4244 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1,38,470ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1168 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 77338ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. நேற்று 1185 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1168ஆக குறைந்துள்ளது. 

கடந்த சில தினங்களாகவே, தினமும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களின் பாதிப்பின் கூட்டுத்தொகை அதிகமாகவுள்ளது. இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 3076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ வசதி நிறைந்த சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்துவது மருத்துவ துறைக்கும் அரசுக்கும் சவாலான காரியம் தான்.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். இது ஒன்றுதான் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இன்று 3617 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 89532ஆக அதிகரித்துள்ளது. இன்று 68 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு என்ணிக்கை 1966ஆக அதிகரித்துள்ளது.