தமிழ்நாட்டில் இன்று மேலும் 4231 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று மீண்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 42,369 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 4231 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவது நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1216 பேருக்கு மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 73,728ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3994 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 78161ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 65 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1765ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 65 பேரில் 7 பேர், இணை நோய் எதுவும் இல்லாதவர்கள். பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.