சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு கேத்வின், கேத்ரின் என இருமகள்கள் உள்ளனர். இருவரும் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு நான்கு வயது சிறுமி கேத்ரினுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் கூட்டிச்சென்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. இதையடுத்து போரூரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கேத்ரின் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாகவே சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கலங்கச் செய்தது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அரசு சார்பாக சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.