சென்னை போரூரை சேர்ந்தவர் பிரகாஷ். எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி யாமினி. இவர், பிரபல தனியார் நிறுவன மேலாளர். இவர்களுக்கு மகள் வியாஷினி (4). இச்சிறுமி, அதே பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் படித்து வருகிறார்.

சிறுவயது முதல் ஞாபக சக்தியில் சிறந்து விளங்கிய வியாஷினி, 49 ஆசிய நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்கள் குறித்து பயின்று வந்தாள்.

இந்நிலையில், மேற்கண்ட 49 நாடுகள், அதன் தலைநகரங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து வியாஷினி விளக்கி கூறி, சாதனை படைத்தாள். தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை, கலெக்டர் சீத்தாலட்சுமி முன்னிலையில், 49 ஆசிய நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்கள் குறித்து 84 விநாடிகளில் வியாஷினி விளக்கி கூறினாள்.

அவளுக்கு டிரையம்ப் நிறுவன உலக சாதனைக்கான பதக்கம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வழங்கி பாராட்டினார். இதில் வியாஷினியின் பெற்றோர், டிரையம்ப் நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.