கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ. மழையும், வால்பாறை, சோலையாறில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இன்றும், நாளையும், இரவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.