நொளம்பூர், யூனியன் சாலை, நாகாத்தம்மன் கோயில் அருகே நொளம்பூர் சப் - இன்ஸ்பெக்டர் லூர்துமேரி நேற்று முன் தினம் இரவு ரோந்து பனியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது நான்கு வாலிபர்கள் காருக்குள் இருந்தனர். மேலும் காருக்குள் இருந்து கஞ்சா வாசனை வந்ததால் நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் காரோடு நொளம்பூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சோதனை செய்தபோது காரில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் : தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் ரசாக்(20), முகமது சித்திக்(19),  சென்னை பெரிய மேட்டைச் சேர்ந்த சுதீஷ்குமார்(21), மதுரையை சேர்ந்த முகமது அன்சாரி(20), என்பதும் பிடிபட்ட 4 பேரும் மதுரவாயில் தஞ்சாவூர் மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படித்து வருவது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிடிபட்டவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
 மேலும் தஞ்சாவூரில் இருந்து ஒரு நபர் கஞ்சாவை கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்று விட்டதாகவும், இவர்கள் அந்த கஞ்சாவை வாங்கி வேறு ஒரு நபரிடம் கொடுக்க காத்திருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்களா? இவர்கள் எந்த பகுதியில் எல்லாம் கஞ்சா சப்ளை செய்து வருகிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.