சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணியாற்றும் ஊழியர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் 360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்த சனிக்கிழமை 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தொற்று பரவ காரணமாக இருந்த கடைக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. கடையின் பணியாளர்கள் தங்கும் விடுதி மற்றும் அதே கட்டிடத்தில் உள்ள துணிக்கடை, ஃபர்னிச்சர் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அந்த சாலை முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், அந்த தெருவில் வசிப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.