தமிழ்நாட்டில் இன்று மேலும் 3882 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049ஆக அதிகரித்துள்ளது. 
     
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று 31521 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 3882 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,049ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 2 நாட்களில் ஒரு லட்சத்தை எட்டிவிடும்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2182 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 60,533ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2852 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52926ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 63 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1264ஆக அதிகரித்துள்ளது.