தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3645 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74622ஆக அதிகரித்துள்ளது. 
   
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இன்று 33615 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3645 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74622ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1956 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 49690ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 41357ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 55.42%பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 46 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது.