இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று 25 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் ஒருவர் கொரோனவால் பலியாகி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வந்த போதும் கூட தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 180 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். நேற்று முன்தினம் வரை 118 பேர் குணமடைந்திருந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 62 பேர் வீடு திரும்பியிருகின்றனர். இனி வரும் நாட்களில் நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அனைவரும் மேலும் 14 நாட்கள் தனிமை சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கோவை மாவட்டதில் 12 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மூலம் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 127 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில்  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் மொத்தம் 26 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். அதே போல சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30 கொரோனா நோயாளிகள் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று 108 ஆம்புலன்ஸ் மூலமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.