சென்னை ஆவடியை அடுத்த கொல்லுமேடைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(32). இவரது மனைவி மஞ்சு (25). இவர்களுக்கு துரையரசன் (5), தினேஷ்(3) என்று இரண்டு மகன்கள். பச்சையப்பன் அங்கிருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி மஞ்சு வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்திருக்கிறார்.

பச்சையப்பன் தான் குடியிருக்கும் பகுதியிலேயே சொந்தமாக இடம் வாங்கி புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். இதனால் கட்டிட வேலைகளை பார்வையிட வசதியாக அதன் அருகிலேயே குடிசை அமைத்து மனைவி மற்றும் மகன்களுடன் தங்கி இருக்கிறார்.

நேற்று காலை வழக்கம் போல கட்டிட வேலைகளை பார்வையிட்ட பச்சையப்பன் அதன்பிறகு வேலைக்கு சென்றுவிட்டார். அவரின் மூத்த மகன் துரையரசன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். மகன் தினேஷுடன் மஞ்சு வீட்டில் இருந்திருக்கிறார்.

இந்தநிலையில் மாலை 3 மணி அளவில் துரையரசனை பள்ளியில் இருந்து அழைத்து வர மஞ்சு சென்றிருக்கிறார். அப்போது தினேஷ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்ததால் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் குடிசையை அருகே செல்லும் மின்சார வயர் உரசி குடிசை தீப்பிடித்திருக்கிறது. சற்று நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் குழந்தை தினேஷ் வெளியே வர தெரியாமல் கதறி அழுதுள்ளான்.

குடிசை எரிவதை பார்த்த அந்த பகுதியினர் தண்ணீர் ஊத்தி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் வந்து தீயை தண்ணீர் மூலம் பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் அவர்கள் யாருக்கும் வீட்டில் 3 வயது குழந்தை இருந்தது தெரியவில்லை.

அந்த நேரத்தில் பள்ளியில் இருந்து மகனை அழைத்துக்கொண்டு வந்த மஞ்சு, தனது குடிசை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதையும், அங்கு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் திரண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அப்போது தனது குழந்தை, குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள், குடிசைக்குள் தீயில் எரிந்து கிடந்த பொருட்களை அகற்றிவிட்டு பார்த்தபோது, குழந்தை தினேஷ், உடல் கருகி கரிக்கட்டையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தை தினேஷ் உடல் கருகி பலியாகி கிடந்ததை பார்த்த மஞ்சு மற்றும் அங்கிருந்த பெண்கள் கதறி அழுதார். குடிசை இருந்த பகுதி மற்ற வீடுகளில் இருந்து தள்ளி இருந்ததால் குழந்தை கதறி அழுதது யாருக்கும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பலியான குழந்தை தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

குடிசை தீப்பிடித்து எரிந்ததில் 3 வயது குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.