இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுதியானதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர். 47 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மக்களுக்கு அச்சத்தை விளைவித்த போதும் குணமடைந்து வீடு திரும்பவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது ஆறுதல் தந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது சென்னையில் 84 வயது மூதாட்டி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கின்றனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், 25 வயது ஆண் ஆகிய மூவரும் கடந்த மார்ச் 25ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து 3 பேரும் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு அவர்கள் தற்போது பூரண நலம் பெற்று உள்ளனர். சிகிச்சைகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து நேற்று அவர்கள் மூவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இதற்கு முன்பாக 74 வயது மூதாட்டி ஒருவர் சென்னையில் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது மேலும் 84 வயது மூதாட்டி மற்றும் 54 வயது பெண் என 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து நலம் பெற்றிருக்கும் செய்தி கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் நம்பிக்கையைக் அளித்துள்ளது.