கிராமப்புற மக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 250 கிராம சேவை மையங்கள், மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல், வெறும் காட்சிப் பொருளாக மாறியுள்ளன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது.

மத்திய, மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பல்வேறு வகையான வளர்ச்சி திட்டங்கள், கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக செயல்படுகின்றன. கடந்த, 2015ம் ஆண்டு முதல் மின்னாளுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறை சேவைகள், அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பம், போட்டித்தேர்வு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பிரின்ட் செய்வது என பல்வேறு சேவைகள் இம்மையத்தில் கிடைக்கிறது.

அரசுத்துறை பணிகள் ஆன்லைன் மயமாகிவிட்டதால், பொதுசேவை மையங்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்திருக்கின்றனர். கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் இருந்த பொதுசேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ், பட்டா மாறுதலுக்கு தவம் இருந்த நிலை மாறி, பொதுசேவை மையத்திலேயே, பதிவு செய்து, சான்று பெறும் வசதி வந்துவிட்டது. இதையடுத்து, ஊராட்சிகள் தோறும் சேவைமையங்கள் அமைத்து மக்களின் அலைச்சலை குறைக்க வேண்டும் என்று மாநில அரசு திட்டமிட்டது.

அதன்படி, தலா ரூ.17 லட்சம் மதிப்பீட்டில், மூன்று பெரிய அறைகளுடன், கிராம சேவை மையம் கட்டப்பட்டது. மகளிர் குழுவினருக்கு முறையான பயிற்சி அளித்து, கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதியை பெற்று, பொதுசேவை மையங்களை நிறுவ அரசு திட்டமிட்டது.

எனினும், கட்டுமான பணி முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், கிராம சேவை மையங்கள் இன்று வரை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. மாவட்டத்தில் உள்ள 240 ஊராட்சிகளில், ரூ.40 கோடி மதிப்பீட்டில் பொதுசேவை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தும், அதில் ஒன்றுகூட பயன்பாட்டுக்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு அரசின் சேவையும் தடைபடுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி கிராமம்தோறும் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுசேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகமாக இயங்கும் வகையில், இணையதள வசதி, கம்ப்யூட்டர் வசதிகளை பெற்றுக் கொடுத்து, மகளிர் குழுக்கள் மூலமாக நடத்த முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டிக்கிடக்கும் இ - சேவை மையங்கள் குறித்து கிராம மக்கள் கூறுகையில், ''''கிராம மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலையே செய்கின்றனர். அதில் பலர் படிக்காதவர்களே உள்ளனர். பொதுமக்களின் சிரமத்தை குறைக்க கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம், அதிகாரிகளின் அலட்சியத்தால் பூட்டிய நிலையிலேயே உள்ளது. அரசு பணமும் வீணாகி வருகிறது.

இதனால், இக்கட்டிடங்கள் சமூக விரோதிகளின் புகலிடங்களாகவும், மது அருந்தும் ''''பார்'''' ஆகவும் பயன்பாட்டில் உள்ளது. பாப்பரம்பாக்கம் கிராமத்தில் கேட் அமைத்தும் அதன் பக்கத்தில் இரும்பு கிரில் அமைக்காததால், அதன் வழியாக குடிமகன்கள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, சேவை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்'''' என்றனர்.