உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 13,387 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 437 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரிசோதனைகள் விரைவாக மேற்கொள்ள தேவையான ரேபிட், பிசிஆர் கருவிகள் போன்றவை குறைவாக இருப்பதால் தினமும் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கே பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள தேவையான கருவிகளை சீனாவிடம் இந்தியா ஆர்டர் செய்தது. அதன்படி சீனாவில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் நேற்று இந்தியா வந்தடைந்தன.

இதனிடையே தற்போது 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சென்னை வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே 68 ஆயிரம் பி.சி.ஆர் கருவிகள் இருப்பதாகவும் பரிசோதனையை விரைவுப்படுத்த புதிதாக 35,000 பி.சி.ஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள இயலும். பாதிப்புகளின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு அவை பிரித்து அனுப்பப்படும் என தெரிகிறது. முன்னதாக டாடா நிறுவனம் சுமார் 8 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் பி.சி.ஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.