தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் சென்னையில் தான் பாதிப்பு தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து கொண்டிருக்கிறது. 

நேற்று வரை தமிழ்நாட்டில் 2526ஆக இருந்தது. இன்று தமிழ்நாடு முழுவதும் மேலும் 231 பேருக்கு பாதிப்பு உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2757ஆக அதிகரித்துள்ளது. இன்றும் அதிகபட்ச பாதிப்பு சென்னையில் தான். சென்னையில் மட்டும்  174 பேருக்கு இன்று கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. ஆனால் இன்று அரியலூரில் 18 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது சற்று பின்னடைவுதான். ஆனால் அவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பியவர்கள். அரியலூர் மட்டுமல்லாது விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சென்றவர்களுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் மொத்த பாதிப்பில் 174 சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த சில தினங்களில் இல்லாத அளவிற்கு இன்று மற்ற மாவட்டங்களில் 57 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இது அதிகம்.

சராசரியாக தினமும் 7000 பரிசோதனைகள் செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தினமும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில்,, இன்று ஒரேநாளில் 10174  பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதனால் தான் 231 பேர் என்றளவிற்கு அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. முதல் முறையாக இன்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பதால் அதிகமான பாதிப்பு கண்டறியப்படுகிறது. எனவே மக்கள் பயமோ பீதியோ அடைய தேவையில்லை. இன்று ஒரேநாளில் 29  பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1341ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்ததால் உயிரிழப்பு 29ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் வெறும் 1.05% மட்டுமே. மற்ற மாநிலங்களை காட்டிலும் இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.