சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் சரிந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஜினியர் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அவர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கி.மீ.க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. 

ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே சாலையில் விழுந்தார். அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்து கிடந்த சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.

 

லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உடல் மற்றும் தலையின் மீது ஏறிய பிறகுதான் லாரி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சாலையில் கிடந்த சுபஸ்ரீயின் உடல் மீது, அங்கிருந்தவர்கள் அதே அதிமுக பேனரை கிழித்து, மூடி வைத்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் கண்ணீர் விட்டனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது. 

முன்னதாக கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, இளைஞர் ரகு உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. கோவையில் ரகு… சென்னையில் சுபஸ்ரீ…இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால், சாலை ஓரங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.