அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து 22 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருள் பேட்டரி தெரு அன்னபூரணி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராகவன் மகன் மணிகண்டன் (40). இவர் மணவூர் அரசு தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவியும் டி.ஆர். கண்டிகை அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர்.

இரவு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகையும், ஒரு கிலோ வெள்ளியும், ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசில் மணிகண்டன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டை முழுவதும் சோதனை செய்தனர். மேலும் ராக்கி மோப்ப நாய் அழைத்து வந்து சோதனை செய்தனர். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.