தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

அந்தவகையில், தமிழ்நாடு பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 26736 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52334ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாலில் 1373பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 37070ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1017 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28641ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 54.72%ஆக உள்ளது. 23,065 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்று 49 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 625ஆக அதிகரித்துள்ளது.