2 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதாக இழுத்தடித்து வருவதால் 21 புறவழிச்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நகர்புறப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பயண நேரத்தினை குறைக்கும் வகையில் நகர்புறபகுதிகளை ஓட்டியுள்ள பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசிடம் நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்து முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நிலம் கையகப்படுத்துவத்தில் பல்வேறு சிக்கல் ஏற்படுவதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல இடங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் இப்போது வரை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பெரியபாளையம், சிவகங்கை, மன்னார்குடி வட்டசாலை, பார்த்திபனூர் வட்டசாலை, சிவகாசி வட்டசாலை, கரூர் வட்டசாலை, உத்திரமேரூர், இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்), வாலாஜாபாத், கமுதி, கும்பகோணம், மேட்டுபாளையம், கோவை மேற்கு வட்டசாலை, வேலூர் வட்டசாலை, ஒசூர் வெளிவட்டசாலை, திண்டுக்கல், திருக்காட்டுப்பள்ளி, ராசிபுரம் பகுதி II ஆகிய 21 புறவழிச்சாலைகள் 245 கி.மீ நீளத்தில் தற்போது வரை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலம் கையகப்படுத்த ரூ.924 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே 42 புறவழிச்சாலைகள் அமைத்தற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.