கார்கில் போரின் 20வது வெற்றி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்போது, இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியில் கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் படை ஊடுருவியது. இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் வீரர்களை விரட்டி அடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி, கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

கார்கில் போரின் 20ம் ஆண்டு நினைவு தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் நேற்று நினைவு கூர்ந்தனர். போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தாய் நாட்டுக்காக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு டெல்லியில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கார்கில் வெற்றி தினத்தில், பாரத மாதாவின் வீர மகன்களுக்காக எனது இதயத்தில் இருந்து பிரார்த்திக்கிறேன். இந்த நாள் நமது வீரர்களின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது. தாய் நாட்டை பாதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்த வலிமைமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,’ என்று கூறியுள்ளார். மேலும், கார்கில் சென்று வீரர்களுடன் கலந்துரையாடிய தனது பழைய நினைவுகளையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது டிவிட்டரில் ‘1999ம் ஆண்டு கார்கில் போரின்போது நமது துணிச்சல் மிக்க வீரர்களை சந்தித்து ஒற்றுமையை காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் அப்போது நான் பாஜ.விற்காக பணியாற்றி வந்தேன். கார்கில் சென்று பார்வையிட்டது, வீரர்களுடன் கலந்துரையாடிய சம்பவங்கள் மறக்க முடியாதவை," என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இங்கு வந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஜனாபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரது திராஸ் வருகை ரத்து செய்யப்பட்டது. ஜம்முவில் பதாம்பிபாக் கன்டோன்ட்மென்டில் உள்ள போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.