மதுராந்தகம் அருகே வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில்களை, டாஸ்மாக் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தலைமறைவான பெண் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை, வழிப்பறி, மணல் திருட்டு, மதுபாட்டில் பதுக்கி விற்பனை ஆகிய குற்ற சம்பவங்கள் அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கடந்த நேற்று முன்தினம் தினகரனில் செய்தி வெளியானது.

இந்நிலையில், மதுராந்தகம் அருகே சூரக்குட்டை பகுதியில் மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சென்னை மண்டல டாஸ்மாக் பிரிவு அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

அதன்பேரில் சென்னை மண்டல டாஸ்மாக் துணை ஆட்சியர் மாலதி தலைமையில், நேற்று சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் சூரக்குட்டை பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரளா மற்றும் வெங்கடேசன் ஆகியோரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதை கண்டுபிடித்தனா்.

இதற்கிடையில், அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்துவதை அறிந்ததும் சரளா மற்றும் வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 15 பெட்டிகளில் அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மதுபாட்டில்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரளா, வெங்கடேசன் மீது புகார் அளித்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.