இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்திருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று 25 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்திய முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 25 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்திருப்பதாகவும் இன்று மேலும் ஒருவர் கொரோனவால் பலியாகி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்த முதல்வர் தற்போதைய நிலவரப்படி 180 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக கூறியுள்ளார். 

நேற்று வரை 118 பேர் குணமடைந்திருந்த நிலையில் ஒரேநாளில் 62 பேர் வீடு திரும்பியிருகின்றனர். இனி வரும் நாட்களில் நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அனைவரும் மேலும் 14 நாட்கள் தனிமை சிகிச்சையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததாகவும் மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே தமிழக அரசு துரிதமாக செயல்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் தற்போது பாதிப்பு குறைந்து இருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் மக்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.