Asianet News TamilAsianet News Tamil

ஆண்டுகள் கடந்தாலும், கரையில் ஓயாதா அலறல் சத்தம்.. பல ஆயிரம் உயிர்களை பலிகொண்ட சுனாமி 17-ம் ஆண்டு நினைவு தினம்!

ஆழிப்பேரலையில் உறவுகளை பறிகொடுத்த மக்கள், சுனாமி நினைவு ஸ்தூபிகள் முன்பு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலோடு மாயமானவர்களுக்கு கடல் நீரில் மலர்களை தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

17th year anniversary of tsunami - fisher people tribute to those are died in tsunami
Author
Chennai, First Published Dec 26, 2021, 9:56 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஆழிப்பேரலையில் உறவுகளை பறிகொடுத்த மக்கள், சுனாமி நினைவு ஸ்தூபிகள் முன்பு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலோடு மாயமானவர்களுக்கு கடல் நீரில் மலர்களை தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

உலகில் ஏற்பட்ட பேரழிவுகளில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு நாடுகளை தாக்கி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமியும் ஒன்றாகும். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியான இதே நாளில் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் அதிகாலையில் நடுக்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆழி பேரலை தாக்கத் தொடங்கியது. இந்தியர்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பெயரான சுனாமி என்ற அந்த இயற்கை பேரிடர் இன்றளவிலும் சுவடுங்களை தாங்கி நிற்கிறது.

17th year anniversary of tsunami - fisher people tribute to those are died in tsunami

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக உருவான சுனாமி, யாரும் எதிர்பாராத வகையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை தாண்டி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. ஊருக்குள் தண்ணீர் புகுந்ததும் அச்சத்தில் உறைந்த மக்கள் உலகமே அழியப் போவதாகவே கருதினர். தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுனாமி அலை தாக்கியது. நாகையில் மட்டும் ஆறாயிரம் பேர் ஆழிப் பேரலைக்கு இறையாகினர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கடற்கரையில் செத்து மடிந்தவர்களை குவியல், குவியலாக அடக்கம் செய்த காட்சிகள் தமிழ்நாட்டில் அதுவரை கண்டிராத பெரும் சோகமாகும்.

சென்னை, கடலூர், நாகை, குமரி என அனைத்து மாவட்டங்களிலும் சுனாமி கோரத்தாண்டவம் ஆடியது. தங்களை வாழவைத்த கடல் அன்னை உயிர்களை இறையாகக்கொண்டதை கண்ட மீனவர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து ஒரே நாளில் வீதிக்கு வந்தனர். பல நூறு குழந்தைகள் பெற்றோர்களை இழந்த அனாதைகளாகினர். கணவனை இழந்த மனைவி, மனைவியை பறிகொடுத்த கணவன், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என சுனாமி ஏற்படுத்திய பேரழிவு 16 ஆண்டுகளை கடந்து அம்மக்களிடையே சோக அலை நீடிக்கிறது.

17th year anniversary of tsunami - fisher people tribute to those are died in tsunami

சுனாமி பேரலை தாக்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் இன்றளவும் நீடிக்கிறது. சென்னையில் சுனாமி தாக்கியபோது காசிமேடு துறைமுகத்தை சுற்றிய பல்லவன் நகர் பவர் குப்பம், பூங்காவனம் புக்கம் உள்ளிட்டபல்வேறு மீனவ குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டது. இவர்களில் சுமார் 2,500 குடும்பங்களுக்கு மட்டும் சுனாமி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. பல நூறு குடும்பங்கள் இன்று வரை வசிக்க வீடுகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

சுனாமி பேரலை தாக்கி ஆண்டுகள் உருண்டோடினாலும், ஆழிப் பேரலையில் மாண்டவர்களின் கதறல் சத்தம் இன்றுவரை கடற்கரைகளில் கேட்டுக்கொண்டிருப்பதாக உறவுகளை பறிகொடுத்தவர்கள் துயரங்களை விவரிக்கின்றனர். சுனாமி பேரலை தாக்கி 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஆழிப் பேரலையில் சிக்கி பலியானவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபிகள் முன்பு அவர்களின் உறவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். கடலூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடல் நீரில் மலர்களை தூவியும், பால் ஊற்றியும் மீனவ கிராம மக்கள் தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுனாமி தாக்கி ஆண்டுகள் பல கடந்துவிட்ட போதிலும், அதன் தாக்கத்தில் இருந்து இதுவரை மீளாத தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios