அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதுவரை உலக முழுவதும் 3000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ்க்கு மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முழுவதும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 36 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கொரோனா அறிகுறி உள்ள சிறுவனை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர்  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதித்த நபரை முதலில் மருத்துவ பரிசோதனை செய்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.