சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாவே உச்சத்தை எட்டி வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், சமூக மனித இடைவெளி பின்பற்றப்பட்டாலும் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 6,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கம்- 6, ஆந்திரா- 2, கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, உ.பி.யில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதியதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.