சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானம் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட விமானத்தில் திடீர் இன்ஜின் கோளறு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 133 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 139 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியதும், இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

விமானம் பறக்கத் தொடங்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று கருதிய அவர் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுத்து விட்டு விமானத்தை ஓடு பாதையிலேயே நிறுத்தி விட்டார்.

இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலமாக புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டடது. விமான பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு 2 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.

அதன்பின்னர் விமானம் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானம் வானில் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே விமானி கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டடு, 139 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இச்சம்பவம் சென்னை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.