தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை விட இன்று அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 14,101 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 1286 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் ஒருநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு. மே 7ம் தேதிக்கு பிறகு, இன்றுதான் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 5,28,534 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று 1286 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 25872ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதியானதால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,598ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று ஒரே நாளில் 610 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக அதிகரித்துள்ளது. 11,345 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 11 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது.