வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பரவி 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஐசிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து தேர்வுகளும் வரும் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதில், உத்தரப் பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது போல தமிழகத்திலும் 12, 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.