தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், இன்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கம் முதல் 13ம் தேதி வரை கொரோனா பாதிப்பு தினமும் தாறுமாறாக அதிகரித்தது. 

ஒருநாளைக்கு சராசரியாக 70 பேர் வீதம் 13 நாட்களுக்கு தொடர்ச்சியாக பாதிப்பு அதிகரித்தது. ஆனால் கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஏப்ரல் 14ம் தேதி 31 பேரும், 15ம் தேதி 38 பேரும் 16ம் தேதி 25 பேரும், 17ம் தேதி 56 பேரும், 18ம் தேதி 49 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும் கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்தது. இந்நிலையில் இன்றைக்கு ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் பாதிப்பு உறுதியானவர்களின் அதிகமாகியுள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 105 பேரில், அதிகபட்சமாக 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். திருப்பூரில் 28 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் இதனால் பயப்பட தேவையில்லை. ஏனெனில், பரிசோதனை எண்ணிக்கை முன்பை விட 3 மடங்கு அதிகமாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாடு மருத்துவர்களின் தீவிரமான மற்றும் சிறப்பான சிகிச்சைகளால் இறப்பு என்பது கடந்த 3 நாட்களாக நிகழவேயில்லை. கடந்த 2 நாட்களாக யாருமே இறக்காத நிலையில், இன்றும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதே 15ல் தான் உள்ளது. 

ஆனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுவரை 365 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது.