நாடு முழுவதும் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பள்ளி,கல்லூரிகளில் ஆசிரியர் தின விழாவை ஏற்பாடு செய்து மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை சிறப்பு செய்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் மாநில கல்லூரிக்கு 103 வயதுடைய முன்னாள் மாணவர் ஒருவர் வருகை தந்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு வயது 103 ஆகிறது. கடந்த 1938 ம் ஆண்டு காமராஜர் சாலையில் இயங்கி வரும் மாநில கல்லூரியில் இளங்கலை பொருளியல் முடித்திருக்கிறார். பின்னர் டெல்லியில் பணியாற்றி வந்த அவர் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் வசித்து வருகிறார்.

நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தான் படித்த கல்லூரியை பார்க்க ஆசைப்பட்டார். இதற்காக கல்லூரிக்கு வந்த அவரை கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தான் பயின்ற வகுப்பறைக்கு சென்ற பார்த்தசாரதி, அங்கு அவர் அமர்ந்திருந்த அதே இடத்தில் மீண்டும் அமர்ந்து பழைய நினைவுகளை அங்கிருக்கும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர் படிப்புடன் சேர்த்து டெக்னாலஜி அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். சிறிது நேரம் அங்கிருந்த அவர் பின்னர் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விடை பெற்றுச் சென்றார்.

103 வயதிலும் முன்னாள் மாணவர் ஒருவர் கல்லூரிக்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.