நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் கல்லிடைகுறிச்சியைச் சேர்ந்த குலசேகரமுடையார் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு இன்று காலை சென்னை வந்ததடைந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பொன்.மாணிக்கவேல் பேசினார்.

அவர் கூறும்போது, தமிழகத்தின் பழங்கால சிலைகள் அமெரிக்காவில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிவித்தார். அதில் 20 சிலைகளை மீட்க தீவிர நடவடிக்கைகள் தற்போது நடந்து வருவதாக கூறினார். அது போல சிங்கப்பூரில் இருந்த 18 சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருவதாக தெரிவித்தார். இது மட்டுமில்லாது ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் தமிழகத்தின் சிலைகள் கடத்தப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

198 அடியில் நடராஜர் சிலை, 107 அடியில் செம்பியன் மாதவி சிலை போன்றவையெல்லாம் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக கடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், அனைத்தும் 100 கோடி, 300 கோடி அளவில் மதிப்புடையது என்றார்.

அரசின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருந்தால் ஒவ்வொரு சிலையாக விரைவில் மீட்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த சிலைகள் வெளிநாட்டில் வேண்டுமானால் காட்சிப் பொருளாக இருக்கலாம் என்றும் தமிழகத்தில் அவை தெய்வ விக்ரகங்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் தமிழ்நாட்டிலேயே சில அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் காட்சிப்பொருளாக இருப்பதாகவும் அதையும் மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

சிலையை டெல்லியில் இருந்து விமானத்தில் கொண்டு வர பணமில்லாத காரணத்தினாலேயே மூன்று நாட்கள் ரயிலில் பயணித்து கொண்டுவந்ததாக கூறியிருக்கிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் சிலைத் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.