10 அரசு மருத்துவமனைகளில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயாபஸ்கர் கூறினார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சத்தில், 8 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் அவர், பேசியதாவது.

தமிழகத்தில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உள்பட 10 அரசு மருத்துவமனை களில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சிகிச்சையின்போது, உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கதிர்வீச்சு செலுத்த பயன்படும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ என்ற நவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் டாக்டர் திரேஸ் அகமது, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.