அரபிக் கடலில் இன்று காலை 8.30 மணிக்கு உருவான மஹா புயல்  லட்சத் தீவு அருகே நிலைகொண்டிருந்தது. அமலித் தீவுக்கு அருகே வடகிழக்கு திசையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் நிலவி வந்த மஹா புயல் இன்று மதியம் தீவிரப் புயலாக மாறி லட்சத் தீவுகளைக் கடந்து வடமேற்கு திசையில் நகரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் மஹா புயல் மையம் கொண்டிருக்கிறது. இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

காற்றின் வேகம் 120 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் இதனால் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது.