அபிநந்தன் வீரமகன். அவரை நினைத்து கலங்கவில்லை என அபிநந்தனின் தந்தை வர்தமான் பெருமையாக கூறியுள்ளார்.  அபிநந்தனின் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதலும் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உங்களின் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் நன்றி என விமானி அபிநந்தனின் தந்தை வர்தமான் தெரிவித்துள்ளார்.

 

இந்திய விமானப்படை அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவராகவும் இருந்து வரும் அவர், இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவலில், "உங்களின் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் நன்றி நண்பர்களே. நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவனுடைய ஆசிர்வாதத்திற்காக. அபி எவ்வித காயங்களும் இல்லாமல் உயிருடன் இருக்கிறான். மனதளவிலும் நன்றாக இருக்கிறான். அவன் எவ்வளவு துணிச்சலாக பேசுகிறான் பாருங்கள். அதுதான் உண்மையான படை வீரர்.

அபியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையாலும் அவன் நல்லபடியாக நாடு திரும்புவான் என்ற நம்பிக்கை உள்ளது. உடலளவிலும் மனதளவிலும் எவ்வித சித்திரவதைகளையும் சந்திக்காமல் அபி நாடு திரும்ப கடவுளை வேண்டி கொள்கிறேன். இந்நேரத்தில் எங்களுடன் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவாலும் பலத்தினாலும் தான் எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. வீரமகனை பெற்று இருக்கிறோம். அதனால்தான் எதற்கும் கலங்காமல் இருக்கிறோம்" என்று  அவர் தெரிவித்துள்ளார்.