நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவகல்லூரி மருத்துவர்கள்? அரியலூரில் பொமக்கள் சாலை மறியல்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை மோசமான பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு பரிந்துரை செய்த மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். நேற்று முன்தினம் அதிகாலையில் மது போதையில் இயக்கப்பட்ட லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரமேஷ் வீட்டின் சுவற்றை உடைத்து உள்ளே சென்றுள்ளது. லாரி புகுந்ததில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ரமேஷின் மனைவி அம்பிகா, அவரது குழந்தைகளான ராஜேஷ், ரம்யா, சுபாஷ் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் நான்கு பேரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ரமேஷின் வீடு முற்றிலும் சேதம் அடைந்ததோடு, வீட்டிலிருந்த பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. விபத்து தொடர்பாக அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்கள் நேற்று கூறியுள்ளனர். மருத்துவமனை தரப்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என்றும், உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று மறுத்துவிட்டு இன்று காலம் தாழ்த்தி தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியதை கண்டித்து, உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி நிர்வாகத்தில் இருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும், குழந்தைகளின் உடல்நிலையை சரியாக கவனிக்காத மருத்துவத்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கோசமிட்டனர்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வலி தாங்காமல் கதறியதால் பிடிபட்ட 60 வயது முதியவர்
மேலும் அரியலூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தவர்களை போலீசார், சமாதானப்படுத்தி அரியலூர் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில், குழந்தையை சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டு கலைந்து சென்றனர்.