அரியலூரில் கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி; மெழுகுவர்த்தி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
ஜெயங்கொண்டம் அருகே கீழமைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர் பவனி விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனியை குடந்தை முன்னாள் ஆயர் அந்தோணிசாமி, குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
நோயாளிகளின் உயிரோடு விளையாடும் மருத்துவகல்லூரி மருத்துவர்கள்? அரியலூரில் பொமக்கள் சாலை மறியல்
பின்னர் வாணவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழமைக்கேல் பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலை சென்றடைந்தது.