முதல்நாள் சமைத்த கோழிக்கறியை சாப்பிட்ட சிறுமி பலி; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜெயங்கொண்டம் அருகே முதல் நாள் சமைத்த கோழிக்கறியை சாப்பிட்ட சிறுமி ஒவ்வாமையால் உயிரிழந்த நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (வயது 45), அன்பரசி (38) தம்பதியர். இவர்களுக்கு துவாரகா (15) இலக்கியா (12) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் நாள் சமைத்த கோழி இறைச்சியை மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்துகொண்ட விதம் தவறு - தமிழிசை காட்டம்
இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவு ஒவ்வாமை காரணமாக சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தா.பழூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.