பூண்டு இதயத்தை பாதுகாக்கும், தலைக்கவசம் தலைமுறையை பாதுகாக்கும் - வினோதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்
தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பூண்டு இலவசமாக வழங்கி தஞ்சை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற இரு சக்கர வாகனம் இயக்கும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆலோசனையின் பேரில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்குபிரிவு காவல் துறையினர் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நூதன முறையில் ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வெள்ளி காசு, பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த நேரத்தில் தக்காளி போன்றவைகளையும் பரிசாக கொடுத்து அசத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்துகொண்ட விதம் தவறு - தமிழிசை காட்டம்
இந்த நிலையில் “பூண்டு இதயத்தை காக்கும், தலைக்கவசம் தலைமுறையை பாதுகாக்கும்” என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சாவூர் நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் 50 வாகன ஓட்டிகளுக்கு தலா 1 கிலோ பூண்டு விலையில்லாமல் வழங்கினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இரு சக்கர வாகன விபத்தில் தலையில் ஏற்படும் காயத்தினால் தான் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார மையம் அறிவிக்கையின்படி தலைக்கவசம் அணிவதால் 70 சதவீதம் படுகாயம் மற்றும் 30 சதவீதம் உயிரழப்பை தடுக்கலாம். அதே போன்று உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தை பலமாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளதை யாரும் மறுக்க முடியாது - கார்த்தி சிதம்பரம் திட்டவட்டம்
தற்போது பூண்டின் விலை உயர்ந்து வரும் நிலையில் “உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தை காக்கும், இரு சக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிவது நமது தலையை மட்டுமல்ல நமது தலைமுறையையும் சேர்த்தே பாதுகாக்கும்” என்ற கருத்துருவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் தற்போது கடுமையாக விலை உயர்ந்துள்ள பூண்டை விலையில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு எளிதில் சென்றடையும் என்றார்.
தற்போது ஒரு கிலோ பூண்டு 500 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகும் நிலையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசாக விலையில்லாமல் பூண்டு வழங்கப்பட்டதை அறிந்து வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து போக்குவரத்து போலீசார் மற்றும் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளை பாராட்டினர்.