இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

தற்போதைய சூழலில் இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இனிமேல் யுவராஜ் சிங்கிற்கு அணியில் இடம் கிடைப்பது நடக்காத விஷயம்.

ஆனாலும் விஜய் ஹசாரே தொடரில் நன்றாக ஆடிய யுவராஜ் சிங், மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தார். இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. அவர் ஏலத்தில் விலை போகததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதையும் இனிமேல் அவருக்கு ஒரு வீரராக எதிர்காலம் பெரிதாக கிடையாது என்பதையும் பறைசாற்றும் வகையில் இருந்தது. 

எனினும் நம்பிக்கையை தளரவிடாத யுவராஜ் சிங், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளார். இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தொடர்ந்து முயற்சித்துவருகிறேன். ஐபிஎல்லில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன், நல்லதே நடக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.