இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி.  அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், ஓரங்கட்டப்பட்ட யுவராஜ், அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

தற்போதைய சூழலில் இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இனிமேல் யுவராஜ் சிங்கிற்கு அணியில் இடம் கிடைப்பது நடக்காத விஷயம். ஆனாலும் விஜய் ஹசாரே தொடரில் நன்றாக ஆடிய யுவராஜ் சிங், மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தார். இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

ஐபிஎல்லை பெரும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கும் யுவராஜ் சிங், அதற்கு முன்னதாக சையத் முஷ்தாக் அலி தொடரில் பஞ்சாப் அணியில் ஆட உள்ளார். இதற்கிடையே டி.ஒய்.பாட்டீல் டி20 தொடரில் ஏர் இந்தியா அணியில் ஆடிவரும் யுவராஜ் சிங், அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 80 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். 12 ரன்களுக்கே ஏர் இந்தியா அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு பால் வல்தாட்டியுடன் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் யுவராஜ். நான்காவது விக்கெட்டுக்கு சுஜித் நாயக்குடன் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோர் 169 ரன்களாக பெரும் பங்காற்றினார் யுவராஜ். யுவராஜ் சிங்கின் இந்த இன்னிங்ஸ் அவருக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் கொடுத்திருக்கும். ஐபிஎல் நெருங்கும் நிலையில் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம், ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.